சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் நேற்று அரசு சார்பில் 218வது நினைவு நாள் விழா அனுசரிக்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 8 அமைச்சர்கள் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு, பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது, வீரம், விசுவாசம் நிறைந்த மருது சகோதரர்கள் வேலு நாச்சியாரின் தளபதிகளாக விளங்கினார்கள். சிவகங்கை சீமையின் விடுதலைக்கு இவர்கள் பாடுபட்டவர்கள். எனவே, அவர்களின் நினைவு நாளை இந்த அரசு கொண்டாடி வருகிறது.
இடைத்தேர்தல்
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது. உலகம் உள்ள வரை அதிமுக நிலையாக இருக்கும். அம்மாவின் ஆசி பெற்ற இந்த அரசு உறுதியான, திடகாத்திரமான அரசாக இருக்கிறது. இந்த ஆண்டு டிசம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் அதிமுகவே வெற்றி பெரும். மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியோடு நல்ல உறவு இருக்கிறது எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் நமது கூட்டணி தொடர்கிறது. தினகரன் அதிமுகவிற்கு வந்தால் அதனை கட்சி பரிசீலனை செய்யும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது அமைச்சர்கள் பாஸ்கரன், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, விஜய பாஸ்கர், ஓ.எஸ்.மணியன், உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன். சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில் நாதன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்